நியூசிலாந்தில் கல்லூரி படிப்பை முடித்தவுடன் என் விசாவை புதுப்பிக்க விண்ணப்பித்தேன். என் மனைவியும் என் மகளும் இணைந்த ஒரே விண்ணப்பம். இந்த விசாவில் மூன்று ஆண்டுகள் இங்கே தங்கி வேலை பார்க்கலாம். இக்காலகட்டத்தில் நாங்கள் நீண்ட காலத் திட்டங்களையும் வகுக்கலாம்.

இன்று விசாவுக்கு காத்திருக்கும் எனக்கு என் மகளுடன் பயணிக்கும் வாய்ப்பு அமைந்தது. வார ஊதியத்தில் வேலைபார்க்கும் என் மனைவிக்கு வாராவாரம் புதிய அட்டவணை. பொதுவாக நாங்கள் மூவரும் நெடுந்தூரம் பயணிக்கும் வாய்ப்பு கிடைப்பது கடினம் - இது எங்கள் தற்காலிக நியூசிலாந்து நிலை. என் மகளின் முதல் வார பள்ளி விடுமுறை வானிலை காரணமாக பெரும்பாலும் வீட்டிலேயே கழிக்க நேரிட்டது. அதனால் நாங்கள் இருவரும் மீதமிருந்த நாட்களில் நாங்கள் வசிக்கும் தெற்கு நியூசிலாந்தை கிரிவலம் போல சுற்றி வர முடிவு செய்தோம். கிட்டத்தட்ட 1500 கிலோமீட்டர் அந்த கிரிவலம்.

நெடுந்தூர பயணம் எனக்கு புதிதல்ல. பின்வரும் பத்தி என் நினைவு நிழல் தந்த தரிசனம் என்று எடுத்துக்கொள்ளுங்கள். 1997-ல் என் அப்பா வழி தாத்தா நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்பொழுது என்னை கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஓய்வுபெற்ற ஆசிரியர் குழுவோடு கோவா அழைத்துச்சென்றார். கோவையிலிருந்து தாமதமாக மங்களூருவிற்கு சென்ற எங்கள் குழுவிற்கு இணைப்பு ரயிலை பிடிக்க இயலாததால் நாங்கள் பின்வந்த கொச்சின் கோவா ரயிலில் பொது பெட்டியில் கோவா வரை பயணிக்க நேரிட்டது. பொது பெட்டியில் நான் முதல்முறையாக ஐரோப்பியர்களை பார்த்தேன். அப்பாவும் அவரது 12 அல்லது 13 வயது மகளும் பயணித்தனர். பயணத்தில் அவர் அவரது வாக்மேனை என்னுடன் பகிர்ந்துகொண்டார். வாழ்க்கையில் முதல்முறை ரெண்டுபக்கம் கேசட் போடக்கூடிய வாக்மேனை பார்த்தேன். அதே சமயம் வித்தியாசமான தந்தை மகள் பிணைப்பையும் பார்த்தேன். இதை பிணைப்பில்லாத பிணைப்பு என்று கூட கூறலாம். அந்த கூட்டநெரிசலின் நடுவிலும் அவர்கள் இருவரும் இயல்பாக இருந்தார்கள். வாக்மன் கேட்கும்போது அவர்களுக்கு அந்த நெரிசல் ஒரு ஒபேரா போல தோன்றியிருக்கலாம். கோவாவில் இளநீர் கடையில் நின்று குடும்பமாக இளநீர் குடிக்கும் அவர்களையும் பாரில் குடும்பமாக குடிக்கும் ஆங்கிலோ இந்தியர்களையும் பார்க்கும்பொழுது சற்று புதிய சாத்தியங்கள் தோன்றின. நமக்கான பயணத்தை நாம் தான் முடிவுசெய்யவேண்டும் என்ற சாத்தியம் அது.

2026-ல் நான் இந்தியாவிலிருந்து நியூசிலாந்து சென்றதை இடமாற்றம் என்று கூறலாம். இந்த மாற்றத்திற்குப் பிறகு நான் நீண்ட தூர பயணம் செல்ல மிக ஆர்வமாக இருந்தேன். நியூசிலாந்தில் பஸ் வசதி குறைவு. தொலைதூரமாகவும் அனுபவத்திற்காகவும் பயணம் செய்ய வேண்டுமென்றால் காரில் செல்வதே நடைமுறைக்கு ஏற்றது. அதிலும் வேன் இருந்தால் வழியில் நாம் கூடாரம் போட்டு தங்கலாம். தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதியுடன் தங்கும் வசதிகள் முகாமில் அமைந்திருக்கும். குடும்பம் குடும்பமாக வேனில் செல்வதும், வானிலே தனியாக தனிமையை தேடும் நபர்களும் நிறைந்த தீவு இது.

என்னிடம் வேன் மற்றும் தங்கும் சாதனங்கள் இல்லை. அதனால் நாங்கள் இருவரும் ஹோம்ஸ்டேவில் விருந்தினர்களாக தங்குவதற்குத் திட்டமிட்டோம் . டுனீடினிலிருந்து கிரிஸ்டசர்ச் செல்லவேண்டும் என்பதே முதல் திட்டம் - கிட்டத்தட்ட நானூறு கிலோமீட்டர்கள். குறைந்த செலவில் நீண்ட தூரம் செல்லும் டொயோட்டா அக்வா காரில், நியூசிலாந்து தெற்குத்தீவில் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் பயணம் - பெரும்பாலும் ஒற்றைவழிச்சாலை. டுனிடினை ஒப்பீடு செய்தால் கிரிஸ்டசர்ச் பெரிய நகரம். அங்கிருந்து பல திசைகளில் பயணம் செல்ல வாய்ப்பு அமையும். எந்தத் திட்டமும் இல்லாமல் 'கடலோரம்' செல்வதில் பயண சுற்றளவை வகுக்க எங்களால் முடியும் என்று நினைத்தோம்.

கிரிஸ்டசர்ச் வரை வண்டி ஓட்டிய எனக்கு சற்று உடல் சோர்வாக இருந்தது. இது முதல் நாள் சோர்வுதான். கடந்த காலங்களில் பல தூரம் இருசக்கர வாகனம் ஓட்டிய எனக்கு இந்த சோர்வு புதிதல்ல. என் மனைவியை உடனழைத்துச் செல்ல இயலவில்லை என்ற மனச்சோர்வும் கங்கை சங்கமம் போல சேர்த்தது. சலிக்காமல் பயணம் செல்லும் எனக்கு இந்தப் பயணத்தை மீண்டும் அவளுடன் செல்ல சிறிது காலங்களே காத்திருக்க வேண்டும் எனவும் தோன்றியது. மற்றொருவிதமாக இந்த சோர்வை நான் இயற்கை தரும் கஷாயமாக பார்க்கிறேன்.

டுனிடினை தாண்டிய சிறிது நேரத்திலேயே வானிலையும் வெப்ப சூழ்நிலையும் மாறி சற்று வெப்பம் அதிகரித்தது. ஏனெனில், நாங்கள் தெற்கு கடற்கரைப் பகுதியின் குளிர்ச்சியான, ஈரப்பதமான கடல் காற்றை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தோம். மேலும், தெற்குத் தீவைக் கடந்து செல்லும் வடமேற்குத் திசைக் காற்றுகள், வறண்ட மற்றும் வெப்பமான 'ஃபோன்' (Foehn) விளைவை ஏற்படுத்துகின்றன.

ஓமாறு நெருங்கியபோது என் மகள் சாராவுக்கு ஃபோன் விளைவு பீட்சா ஆசையைத் தூண்டியது.

அடுத்த பாகம் விரைவில்.

Post Image 1 Post Image 2