வணக்கம் நண்பர்களே

இந்த என் எழுத்து என் நினைவலைகளையும் கனவுகளையும் ஒன்று சேர்த்து கோர்க்கும் முயற்சி. இதில் எனக்கு ஒரு வசதி. நான் நினைத்த வடிவத்தை கொடுக்கவும், என்னை துலைக்கவும், பின் எளிதாகத் திரும்பக் கொண்டுவரவும் உதவுகிறது. ஒரு உதாரணம் சொன்னால், ரிஷிகேஷில் சிலர் தங்களது கால்களில் கயிற்றை கட்டி வெள்ளமென ஓடும் ஆற்றில் நீச்சல் அடிப்பது போல. கட்டுரையில் எந்த பகுதி எந்த வடிவத்தை சேர்ந்ததென்று முடிவு உங்களிடம் விடுகிறேன்.

90 களில், பள்ளிக்குச் செல்வதின் காய்ச்சலுக்கு மருந்தாக இருந்தது விளையாட்டு. இன்று, தினம் இரண்டு மாத்திரைகளை விழுங்கும் ஒருவருக்கு அன்று வாரத்தில் இருமுறை பள்ளியில் உடற்பயிற்சி வகுப்பு.

கோவை வடக்கு, அரசினர் மேல்நிலைப் பள்ளி, ஆங்கிலவழிக்கல்வி. பள்ளியில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு ஆங்கில பிரிவு இருந்தது. இதை மாறாக இருமொழி ஊடகம்
என்று கூறலாம். ஆங்கில ஆசிரியை தனது தமிழ்ப்பற்றால் ஆங்கில பாடத்தை தமிழிலே மொழி பெயர்ப்பாள். இன்று கணினி மூலம் ஆங்கில கீபோர்டை கொண்டு இந்த கட்டுரையை எழுதும் போது அந்த ஆசிரியையை நினைவு கூறுகிறேன்.

இருபாலரும் படிக்கும் பள்ளி அதில் ஒரு பிரிவினர் பள்ளி மைதானத்திலேயே கோகோ விளையாடினர், மற்றொரு பிரிவினரின் பிரதான விளையாட்டு கிரிக்கெட். பெல் அடித்ததும் மைதானத்திற்குச் செல்ல வரிசை ஆரம்பிக்கும். விளையாட்டில் தயக்கம் கொண்ட Reluctant மாணவர்கள் சற்று கடைசியில் நிற்பதுண்டு. கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மைதானத்திற்கு ஒரு குக்கர் விசில் நேரத்திற்குள் சென்றடையும் வேகம்.

மைதானத்தை சுற்றி சுவர்கள் முழுமையாக போடப்பட்டிருக்கும். ஒற்றை வாயில். கிட்டத்தட்ட சதுர வடிவ மைதானத்தின் ஓரத்தில் புளியங்காய் மரம். படிப்புன்னா இவனுக்கு புளியங்காய்னு அம்மா சொல்லுவதுண்டு .. அதை சிலர் மறுக்கமுடியுமா? சமயத்தில் அந்த புளியங்காய அரைத்து பந்தாக செய்து காயவைச்சு பதப்படுத்தி உபயோகிப்பதும் உண்டு.

உடற்கல்வி வகுப்பு கிரிக்கெட் நேரம். பேட்டும் பந்தும் கூட்டுப்பொறுப்பு. உடற்பயிற்சி ஆசிரியர் கேட்டை (Gate) திறந்து மாணாக்கர் சுதந்திரத்திற்கு இடம் தந்து, பைக்கில் வெளியே செல்வது வழக்கம். சில நாட்கள் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது சிறிய அறையில் அமர்ந்திருப்பார். பெரும்பாலும் புகார்களும் தண்டனைகளும் அரங்கேறும் இடம் அதுதான். பொதுவாக அன்பானவர்; ஆனால் தண்டனை தீவிரமாக இருக்கும். அவர் மகனோடு பைக்கில் வலம் வருவார். அடிக்கடி சீப்பால் தலைமுடியைச் சீவிக்கொள்வார். ஆசிரியைகளுக்கு மத்தியில் அவருக்கு ஒப்பீட்டளவில் அதிக மரியாதை இருந்தது.

கிரிக்கெட்டில் பந்து தொலைந்தால் ஒரே மாற்று கால்பந்துதான். பந்து அதன் வடிவத்தை இழக்காமல் இருந்தாலும் அதன் தோல் சற்று பலவீனமாகவே இருக்கும். காற்றிழந்த பந்துக்கு நாங்கள் பம்ப் கொண்டு உயிர் கொடுப்போம். அவசர சிகிச்சை போல அடிக்கடி உயிர் கொடுக்க வேண்டி வரும். எல்லோரும் பந்தாட ஆர்வம் காட்டுவதால், கோல் கீப்பர் பொறுப்பை மாறி மாறி ஏற்றுக்கொள்வோம். கோல் கீப்பருக்கு அது ஒரு தற்காலிக இடம்தான். பலசமயம் கோல் கீப்பர் நிறுத்தப்படாது. கால்பந்தாட்டத்தின் விதிகளைப் பற்றிய ஆர்வம் ஓரிருவருக்கு நிச்சயம் இருந்திருக்கக்கூடும். இந்த விளையாட்டில் அவர்களுக்கு இடம் கிடையாது; மரத்தடி நிழல்தான்.

சற்று 90-களிலிருந்து தாவி நிகழ்கால 2026 ல் ஆண்கள் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்திற்குக் கவனத்தைச் செலுத்தினால், துருக்கியைச் சேர்ந்த 6 அடி உயர கோல் கீப்பர் Altay Bayındır தனது கைகளைப் பறவையின் சிறகுகளைப் போல விரித்து, முழு கோல் போஸ்டையும் தானே மறைப்பது போல பாவிக்கிறார் ஏன் ? இது பெனால்டி கிக் சமயம். பறவை தனது கூட்டைப் பாதுகாப்பது போல, எதிராளியை மிரட்டுகிறார். ஒரு நிமிடம் நான் ஷூட்டரின் மனநிலையை அடைந்தேன். Altay-யின் தோரணை, கோல் டார்கெட்டைச் சிறிதாக்கிவிட்டது.

இந்த சிலிர்ப்பின் தருணத்தை பற்றிக்கொண்டு கனவளைகளால் மறுபடியும் தாவி பள்ளி மைதானத்திற்குச் சென்று பார்க்கிறேன். எந்த சத்தமும் இன்றி எல்லோரும் புளியமரத்தடியில் நிழல் காக்கிறார்கள். காரணம்? கால் பந்து தன் கடைசி மூச்சை விட்டு வீடுபேறு அடைந்தது. அந்த அமைதியில் விழித்துக்கொண்ட ஆசிரியர் வெளியே வந்து பார்த்து விட்டு பின் எதுவும் சொல்லாமல் ஒரு மாணவனை அறைக்கு சென்று அவரது பையை எடுத்து வரச்சொல்கிறார். அதில் அவர், தன் மகனுக்காக வாங்கிய புதிய கால்பந்தை எடுத்து தனது அக்குளுக்குள் வைத்து விசில் அடித்து அசெம்பிள் ஆகச் சொல்கிறார். பின்னர் கோல் கீப்பரை எழச் சொல்ல, ஒரே அமைதி. அதை புரிந்துகொண்ட அவர் எப்பொழுதும் விளையாடாமல் ஒதுங்கி நின்ற மரத்தடி மாணவனை கேட்கிறார் - கோல் கீப் பண்றியா ?

பின்னர் சுழற்சி முறையில் எங்களுக்கு பெனால்டி ஷூட்-அவுட்டும் அதை பாதுகாப்பதும் பயில்விக்கப்பட்டது.

Altay இன் ஆசீர்வாதங்கள் - காலத்தில் பின்னோக்கி எழும் அந்த புளிய மரத்தடி நண்பனுக்கு.