
வணக்கம் நண்பர்களே. நான் இந்தப் பயணத்தைப் பற்றி மூன்றாவது பதிவாக நீட்டி எழுதுவதற்கு நேர நெருக்கடியே காரணம். முடிந்த அளவுக்கு நான் ஞாபகத்தில் இருக்கும் நினைவுகளைத் தமிழில் எழுத முயல்கிறேன். இது எனக்கு ஒரு வித யோக அனுபவத்தைக் கொடுக்கிறது. உங்கள் பொறுமைக்கு இந்த எழுத்து யோகியின் நன்றிகள்.
டிமருவிலிருந்து கிறிஸ்துசர்ச் வரை சமமான மற்றும் நேரான பாதை. என் மகள் "எப்போ வரும் கிறிஸ்துசர்ச்?" என்ற கேள்வியை அடிக்கடி கேட்க, நானும் அந்தக் கேள்விக்குப் பதிலாக "வண்டி ஓட்டினால் வந்துவிடும்" என்று சொல்லிக்கொண்டே ஓட்டினேன்.
கிறிஸ்துசர்ச் நெருங்கியவுடன் சத்தம் எழுப்பும் மெட்டல் சாலை அமைதியான தார் சாலையாக மாறியது. நான் பயணிக்கும் போது சென்ற இடத்தின் வரவேற்பைக் கவனிப்பது வழக்கம். கிறிஸ்துசர்ச் சாலைகள் சில வெளியூர் வெளியேற்றங்களை முதலில் கொண்டும், பின்னர் உள்ளூர் வெளியேற்றங்களையும் கொண்டதாக இருந்தது. சூரியன் அஸ்தமிக்கும் நேரம் இது. வெகுதூரத்தில் மலைகளைக் காண முடிந்தது. இது நியூசிலாந்தில் நாம் பார்க்கும் காட்சிகளிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. கிறிஸ்துசர்ச் நகரம் கேன்டர்பரி சமவெளியில் கட்டப்பட்டிருப்பதால், அது மிகவும் சமதளமாக உள்ளது.
கிழக்கில் கடல், மேற்கில் மலைகள், வேறெங்கு போனாலும் கிறிஸ்துசர்ச் நகர்ப்புறம். எங்கேயாவது காரை நிறுத்தி தங்கும் விடுதியைத் தேடலாம் என்று நினைத்தேன். கூகுள் மேப்பில் தேடி அருகிலிருந்த KFC-ஐ கண்டுபிடித்து நிறுத்தத்திற்குத் தேர்வு செய்தேன். "சாரா, சாப்பிடப் போறோமா?" என்று கேட்டாள். நான் தங்கும் விடுதியைத் தேடுவதைப் பார்த்தவுடன் மீண்டும் நத்தையைப் போல சுருண்டு படுத்துக்கொண்டாள். நான் சில நிமிடங்களில் ஒரு தங்கும் வீட்டைத் தேர்ந்தெடுத்தேன். "வீடு கிடைச்சாச்சு" என்றவுடன் சாராவுக்கு ஆர்வம் அதிகமானது. இந்தத் தேர்வு சற்று வித்தியாசமாக இருக்கும் என்பது அவளது எதிர்பார்ப்பு. அதேபோல அந்த வீட்டில் ஒரு சிறப்பம்சத்தைப் படங்களின் மூலம் கண்டாள்.
மேற்கில் சென்ற நாங்கள் இருவர் கிழக்கை நோக்கிப் பயணித்தோம். கடந்த பதினெட்டு மாதங்கள் டுனிடினிலேயே வாழ்ந்த சாராவுக்கு கிறிஸ்துசர்ச் ஓர் பெரிய மாற்றம். பரந்து விரிந்த ஊரில் நெடுஞ்சாலைகள் போல உள்ளூர் சாலைகள். எங்கள் இருவரின் முதற்பார்வை - பரவலாக்கப்பட்ட, குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட - புறநகர்ப் கட்டமைப்பைக் கொண்ட நகரம். எல்லாப் பகுதிகளிலும் ஒரு பூங்காவை எங்களால் பார்க்க முடிந்தது. நான் சாராவிடம் கேட்டபோது, அவள் தன் பார்வையைப் பகிர்ந்து கொண்டாள். எங்கள் இருவரின் பார்வைகள் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தன.
ஒருவழியாக கிழக்குக் கடலுக்கு (பசிபிக்) நெருக்கமான நியூ பிரைட்டனில் (New Brighton) அமைந்துள்ள அந்த வீட்டுக்குச் சென்றடைந்தோம். வீட்டின் மேல்தளத்தில் எங்கள் அறை. முதலில் அறையைப் பார்த்துவிட்டு, அதன்பின் நாங்கள் இருவரும் பெட்டியை மேலே கொண்டு செல்லத் திட்டமிட்டோம். காணொளி பதிவு செய்யும் சாதனத்தைக் கையில் வைத்திருந்த சாரா, அறையைப் பார்க்கும் ஆர்வத்தில் அதை இயக்க மறந்துவிட்டாள். வீட்டு உரிமையாளரும் அவரது குடும்பமும் வீட்டில் இல்லை. எங்களுக்குக் குறுஞ்செய்தி மூலம் வீட்டைப் பற்றிய எல்லா தகவல்களையும் அளித்திருந்தார். சாரா கதவைத் திறந்து மெதுவாக மேல்மாடி அறைக்குச் சென்று பார்த்தாள். இதற்கிடையில், வீட்டு நுழைவாயிலில் இருந்த காலணிகளைக் கொண்டு வீட்டில் இருந்த நபர்களை அனுமானித்தேன். எங்களுக்கென ஓர் அறை, அதனுடன் இணைந்த கழிப்பறை. சாரா எல்லாத் திரைகளையும் திறந்து பார்த்தாள். அம்மாவை அழைத்து அவள் பார்த்த எல்லாவற்றையும் கூறினாள்.
சாமான்களை எடுத்து வந்து சற்று இளைப்பாற நினைத்த எனக்கு அந்த வீட்டின் சிறப்பம்சத்தை அவள் நினைவுகூர்ந்தாள். "சரி, அதைப் பார்க்கலாம்" என்று வெளியே செல்லும் போது மற்றொரு தங்கும் நபர் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் பீரையும் தின்பண்டங்களையும் எடுத்துக்கொண்டு கீழ்தளத்தில் இருந்த அவரது அறைக்குச் சென்று சாத்திக்கொண்டார். இதற்கிடையில் நாங்கள் இருவரும் ஒரு புன்னகையைப் பரிமாறிக்கொண்டோம். அவர் மலேசியத் தமிழர் போல தோற்றமளித்தார். இதை அவரது தலைமுடியையும் அதன் வண்ணத்தையும் கொண்டு சரியாக அனுமானித்தேன்.
வீட்டின் பின்பக்கத்திற்குச் செல்ல ஒரு தனிக் கதவு. அதைத் திறந்தாள். அங்கே அமைதியாக ஒரு சைபீரியன் ஹஸ்கி கட்டவிழ்த்தபடி நடந்துகொண்டிருந்தது. நாங்கள் இருவரும் புதிய விருந்தாளிகள் என்பதை அது புரிந்துகொண்டது போல தோன்றியது. நாங்கள் இருவரும் சற்று மெதுவாக அதனிடம் சென்று பழகினோம். பின்னர் அந்தச் சிறப்பம்சத்தின் அருகில் சென்று அதன் பூட்டை அவிழ்த்துத் திறந்து பார்த்தோம். மெதுவான குளோரின் வாடையுடன் அருமையான சூடுநீர் நீச்சல் தொட்டி அது.
வீட்டுக்கு வெளியே யாரோ பேசுவது போல குரல் கேட்டது. வெளியே சென்று பார்த்தபோது, ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் பொருட்கள் ஏற்றிச் செல்லும் இழுவை வண்டியை வீட்டுக்குள் நிறுத்தத் திணறிக்கொண்டிருந்தனர். நான் சென்று வாகன நிறுத்தத்திற்கு சற்று உதவி செய்தேன். அவர்களில் ஒருவர் வீட்டு உரிமையாளரின் தங்கை மற்றும் அவரது துணை. துணைவரின் பாலினத்தை யூகிக்க முடியாத தோற்றம். "உரிமையாளரின் குடும்பம் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார்கள்" என்று அந்தப் பெண் கூறி முடிப்பதற்குள் அவர்களது குடும்பம் வந்தடைந்தது. ஐரோப்பிய-ஆசிய இணை ஜோடி வெய்ன்-எஸ்தர் (Wayne-Esther) மற்றும் அவர்களது சிறுவயது மகன் மற்றும் மகள். நான் முன்பு பார்த்த காலணிகளின் எண்ணிக்கை சமன்பாட்டை அடைந்தேன்.
மேல் மாடியில் எங்கள் தங்கும் அறைக்கு அருகே திறந்த சமையலறை. எல்லா வசதிகளுடன் அமைந்த சமையலறையில் ராட்சதக் குளிர்சாதனப் பெட்டி. சாமான்கள் நிறைந்து காணப்பட்ட குளிர்சாதனப்பெட்டியில் ஒரு பிரிவு தங்குபவர்களுக்காகப் பால் சுமார் ஒரு லிட்டர் வைக்கப்பட்டிருந்தது. முக்கோனா (Moccona) காபித் தூளும், முந்தைய விருந்தாளிகள் விட்டுவைத்த கிட் கேட் தயார் நிலைக் காபித் தூளும்.
கீழ்த்தளத்தில் தங்கியிருந்த நபர் எஸ்தரிடம் தனது சுயவிவரத்தை (Resume) விவரித்துக்கொண்டும், அதே சமயம் சமையல் செய்துகொண்டும் இருந்தார். வெய்ன் பரபரப்பாகப் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தார். அவர் பாத்திரம் தேய்த்தபடியே, நான் சற்றுநேரம் உரையாடினேன். அவர் கிறிஸ்துசர்ச்சில் பல ஆண்டுகள் நில அதிர்வு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறினார். அவர் 2011 ஆம் ஆண்டு நடந்த கொடூர நிலநடுக்கத்திற்குப் பின்பு வீடுகளின் மதிப்பீடுகளை மறுமதிப்பீடு செய்யும் ஆலோசனை வேலையையும் பார்த்ததாகக் கூறினார். இடையில் நம் மற்றொரு விருந்தாளி, "இடிந்த ஆலயம் திரும்பக் கட்டப்படாத இந்த ஊரை கிறிஸ்துசர்ச் என எப்படி அழைப்பது?" என்று கேட்டார். அதற்கு வெய்ன் சற்று புன்னகைத்தார்.
நானும் சாராவும் கொண்டுவந்த உடனடி நூடுல்ஸைச் சமைத்துச் சாப்பிட்டு உறங்கினோம்.
