
ஓமாறுவில் தனியார் விமானப் பயிற்சி நிறுவனம் பிரபலம் - அதிலும் இந்தியர்களிடையே மிகவும் பிரபலம். அதற்கான காரணத்தை அறிய கூகிளில் தேடியபோது, ஓமாறுவின் வானில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருப்பதை அறிந்தேன். நியூசிலாந்து எண் 1 நெடுஞ்சாலையின் இருபுறமும் காபி மற்றும் உணவு விடுதிகள். நடுமதிய வேளையில் செல்லப்பிராணிகளுடன் நடை செல்லும் மனிதர்கள்.
எங்கள் வசதிக்கேற்ப ஒரு பீட்சா கடையருகில் காரை நிறுத்தினோம். பீட்சாவுக்கு பில் போட்டு சமைத்துக் கொடுத்தவர் புதிதாக கடையில் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஊழியர். டர்பன் அணிந்திருந்த அவர் புதிதாக சேர்ந்த நபர். கடையை தனியாக நடத்திக்கொண்டிருந்தார். பொதுவாக நியூசிலாந்தில் வாழும் இந்தியர்கள் தங்கள் பிறப்பு நாட்டினரைப் பார்த்து பெரிதாக வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வதில்லை. அவர் பஞ்சாப் அல்லது அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் போல தோன்றியது. இந்தியாவில் பாஜி (Paaji) என்று அன்புடன் கூப்பிட்டுப் பழகிய எனக்கு, இந்த மனிதனை அழைக்க சற்று தயக்கம்.
ஓமாறுவில் பீட்சாவை எடுத்துக்கொண்டு காரிலேயே சாப்பிட முடிவு செய்தோம். பீட்சா மணம் வீச, ஓமாறுவிலிருந்து பதினைந்து நிமிடங்களில் ஒரு ஓய்வு நிறுத்தத்தில் நான் காரை நிறுத்தினேன். நிற்காமல் ஓடும் வைட்டாகி (Waitaki) ஆற்றுக்கு அருகே எங்கள் நிறுத்தம். ஆற்றுக்கு அப்பால் கான்டர்பரி (Canterbury) பிராந்தியம். வைட்டாகி ஆறு நியூசிலாந்தின் தெற்குத் தீவில் அமைந்துள்ள 209 கிலோமீட்டர் (130 மைல்) நீளமுள்ள ஒரு முக்கியப் பின்னல் வடிவ ஆறாகும்; இது மெக்கென்சி படுகையிலிருந்து நீரை வெளியேற்றி, மூன்று நீர்மின் நிலைய அணைகள் வழியாகப் பாய்ந்து, பசிபிக் பெருங்கடலில் கலக்கிறது. கூகிள் வரைபடத்தைக் கொண்டு பார்த்தால் அதன் பின்னல்போன்ற வடிவத்தைப் பார்க்கலாம். இந்த ஆறு பொழுதுபோக்கு மீன்பிடித்தலுக்கும் பெயர்போனது.
டுனீடினிலிருந்து ஓமாறு வரை வளைந்த சாலை. பின்னர் டிமாறு (Timaru) வரை அவ்வளவு வளைவுகள் இல்லை - வைட்டாகி ஆற்றின் பின்னல்கள் தான். கிழக்கில் பசிபிக் பெருங்கடலும் மேற்கில் கான்டர்பரி மற்றும் வடக்கு ஒடாகோ சமவெளிகளை வரையறுக்கும், சமமான அல்லது மென்மையான சரிவுகளைக் கொண்ட மேய்ச்சல் நிலங்கள், பயிர் வயல்கள் மற்றும் கால்நடை வேலி அமைப்புகள். கான்டர்பரி சமவெளிகள் மற்றும் தெற்குப் பகுதி கிராமப்புறங்களின் பரந்த சமவெளிப் பரப்பின் ஊடாகச் செல்லும் ஒரே முதன்மைச் சாலை SH1 (State Highway 1) என்பதால், மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் செல்லும் பகுதிகளுக்கு மிக அருகிலேயே லட்சக்கணக்கான பண்ணை விலங்குகள் மேய்வதைக் காண முடிகிறது.
SH1-க்கு மேற்கே நான் காரை விட்டால் - கரடுமுரடான உள்நாட்டுச் சாலைகள் - சற்று என் மனதில் எழுந்த ஆசை இது. நான் மற்றொருமுறை மோட்டார்சைக்கிளில் செல்ல இந்த வழிகளை என் மனதில் குறித்துக்கொண்டேன். என் மகளுடன், அதுவும் சிறிய காரில் செல்லும் எனக்கு மென்மையான டிமாறு நெடுஞ்சாலை ஏற்றதாக இருந்தது. டிமாறுவில் நாங்கள் இருவரும் சற்று ஓய்வெடுத்தோம். டிமாறு ஒரு துறைமுக நகரம். 1903 ஆம் ஆண்டு ரைட் சகோதரர்களுக்கு முன்பே இங்கே ரிச்சர்டு பியர்ஸ், உறுதிப்படுத்தப்படாத ஒரு இயந்திர ஆற்றல் கொண்ட விமானப் பறத்தலை நிகழ்த்தியுள்ளார். வலைத்தளத்தில் இந்த நெளிமுடி கண்டுபிடிப்பாளரைப் பற்றி காரில் உட்கார்ந்தபடியே தெரிந்துகொண்டேன்.
ஓமாறுவில் பீட்சாவை சாப்பிட்டவுடன் என் மகள் உறக்கம் தழுவிய கனவு வானில் மிதந்தும், அதில் ஒரு இடிமின்னலைப் பார்த்ததும் போல திடீரென்று எழுந்துகொண்டாள்.