இருபது ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் முதுகலைக் கல்வி பயிலும் என்னை, செயற்கை நுண்ணறிவு பாடங்களின் தாக்கம் தினமும் துரத்துவது போல் உணர்கிறேன். விடாது செயற்கை அறிவு என குறிப்பிடுவதை நான் ஆழமாக உள்நோக்கி எனக்கென ஓர் அர்த்தத்தை உருவாக்கிக்கொள்ள முடியுமா?
நவீன காலகட்டத்தில் ஆலன் டூரிங் (Alan Turing) செயற்கை அறிவுக்கு ஒரு தொடக்க பார்வை அளித்தார். அவர் ஒரு இயந்திரத்தின் வெளிப்படையான செயல்பாடுகளும் அதன் பகுத்தறியும் திறனும் மனிதனின் செயல்பாடுகளிலிருந்து வேறுபடுத்தி அறிய முடியாத வகையில் அமைந்தால், அந்த இயந்திரம் செயல்பாட்டு ரீதியாக அறிவுத்திறன் கொண்டதாகவே கருதப்படும் என்று வாதிட்டார். அவர் எழுதிய Computing Machinery and Intelligence புத்தகத்தின் மூலம் அதை உணர முடியும். அவரது இந்த சிந்தனைச் சோதனை தத்துவத்திலிருந்து செயல்பாட்டிற்கு நம்மை கொண்டு சென்றது.
கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் க்ளாட் ஷன்னோன் (Claude Shannon) தனது தகவல் கோட்பாட்டை அளித்தார். அதன் தூணாக அமைவது நிகழ்தகவு (probability) தன்மை. இதை நிச்சயமற்ற தன்மையென்றும் எடுத்துக்கொள்ளலாம். ஷன்னோனின் மிக முக்கியமான வரையறை - தகவல் என்பது நிச்சயமற்ற தன்மையைத் தீர்ப்பதாகும். ஷன்னோன் நிகழ்தகவைப் பயன்படுத்தி நிச்சயமற்ற தன்மையை அளவிட்டார்; டூரிங் கணக்கீட்டின் மூலம் அந்த நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்கும் வழிமுறைகளை வடிவமைத்தார்.
இரு நண்பர்களின் பங்களிப்புகளை இணைத்துப் பார்த்தால், தகவலும் செயலும் ஒன்றையொன்று வடிவமைத்து முன்னெடுக்கும் ஒரு இயக்க உறவு வெளிப்படுகிறது. இதனை எளிமையாகப் பார்த்தால், தகவல் செயலின் தூண்டுதலாகவும், செயல் தகவலை உருவாக்குவதாகவும் ஒரு சுழற்சி உருவாகிறது. வரலாற்றில் இந்த கருத்து புதிதல்ல ஆனால் இதன் வேகம் மிகவும் புதிது. இதை மெய்யறிவு கொண்டு அணுகினால், அன்று டூரிங்கும் ஷன்னோனும் இயந்திரத்தின் அறிவைப் பற்றித் தொடங்கிய உரையாடல், இன்று மனிதனின் அறிவைப் பற்றிய தேடலாக விரிவடைகிறது.